Tuesday, 21 February 2012

சித்தவித்தைக்கான மாணவனின் தகுதி - ஞானம் – 01


ஞானம் – 01:
சித்தவித்தைக்கான மாணவனின் தகுதி
ஓம் அகஸ்திய மாமகரிஷி குருவே நமஹ
மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு வித்தை தந்த சற்குருவை நிதமும் போற்று
கையார மனமாற ஞானஞ் சொல்லு காரணமாங் குருபதத்தைக் கருதிப்பாரு
வையமெல்லாம் கொண்டாட கருவைச் சொல்வேன்
பொய்யாதவுபதேச குருவைப்போற்றி புகழாக பனிரெண்டு வருஷங்காரே  (01)
பொருளுரை:
மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு: உண்மையான ஞானத்தினை தரும் குருவினை பூசை செய், வித்தை தந்த சற்குருவை நிதமும் போற்று: வித்தையினை உனக்கு தொட்டுக்காட்டிய குருவினை என்றும் போற்றி மதிப்பளி!, கையார மனமாற ஞானஞ் சொல்லு : மனம் நிறைவுற அமைதிபெற காரணமான ஞானம் தரும், காரணமாங் குருபதத்தைக் கருதிப்பாரு: குருவின் பதத்தினை எண்ணி பார்த்து, வையமெல்லாம் கொண்டாட கருவைச் சொல்வேன்: உலகமெல்லாம் கொண்டாடும் உண்மையினை சொல்வேன், பொய்யாதவுபதேச குருவைப்போற்றி புகழாக பனிரெண்டு வருஷங்காரே: உண்மையான உபதேச குருவிடம் பன்னிரெண்டு வருடங்கள் பணிந்து வாழந்தவருக்கு
நேர்பொருள்:
பன்னிரண்டு வருடங்கள் தனக்கு ஞானம் போதித்தவருக்கு பணிந்து வாழ்ந்து வித்தை கற்று, மெய்ஞான குருவினை பூசை பண்ணி, வித்தை கற்பித்த குருவினை எப்போதும் போற்றும் மாணவனுக்கு திருப்தியுடன் மனமகிழ்ச்சியுடன் உனக்கு வித்தை தந்த குருபதத்தினை எண்ணிப்பார்த்து உலகமெல்லாம் கொண்டாடத்தக்க உண்மையினை சொல்லுகிறேன் கேள்!
சித்த வித்யா விளக்கவுரை:
இந்த பாடலில் அகத்தியர் பெருமான் யாருக்கு இந்த ஞானத்தினை சொல்லலாம் என்ற மாணவனின் தகுதியினை விளக்குகிறார்
1.   யாரொருவன் தனக்கு வித்தை தந்த குருவுடன் பன்னிரெண்டு வருடங்கள் சேவை செய்து வாழ்ந்தவன்
2.   மெய்ஞ்ஞான குருவை பூசித்தவன்
3.   வித்தை தந்த குருவை எப்போதும் போற்றி மதிப்பவன்
ஆகிய மூன்று தகுதிகளும் உள்ளவனுக்கு இந்த ஞானத்தினை சொல்ல வேண்டும் என்கிறார். ஏன் இந்த தகுதிகள்?
ஏன் பன்னிரண்டு வருடங்கள்?
பண்டைய குருகுல வாசத்திலிருந்து இன்றைய கல்வி முறை மட்டும் பன்னிரண்டு வருடங்கள் கல்விக்காக என ஒதுக்கியுள்ளார்கள். இஸ்லாமிய மதத்தில் பார்த்தீர்களானால் பன்னிரெண்டு வருடங்கள் பாங்கு சொன்னவருக்கு சொர்க்கம் கடமையாகிவிட்டது என நபிகளால் கூறப்பட்டுள்ளது. ஜோதிட சாஸ்திரத்தில் இராசிகள் பன்னிரண்டு, இவற்றுள் வித்தைகளுக்கு அதிபதியான குரு ஒரு வருடத்திற்கு ஒரு இராசி வீதம் இராசி மண்டலத்தினை சுற்ற எடுக்கும் காலம் 12 வருடங்களாகும். குருவானது இராசி மண்டலத்தில் சஞ்சரிக்கும் போது அந்தந்த மண்டலத்தினை பலப்படுத்துகிறது. அதாவது ஜாதகம் என்பது ஒருமனிதனின் புளூ பிரிண்ட் போன்றது, அதாவது அவனது ஆற்றல்களின் சேமிப்பு எவ்வளவு என்பதனை காட்டும், மனிதன் தன் முயற்சியால் செய்யும் எதனதும் பலன் அவன் வசிக்கும் இடத்திற்கு எந்த கிரக நிலைகாணப்படுகிறதோ அதன் படி கிடைக்கும். இதன் படி அறிவு, செல்வம், மன ஆற்றல், வித்தைகளுக்கு அதிபதியான குரு பகவான் வருடமொன்றிற்கு ஒரு பாவம் (இராசி) வீதம் கடக்கிறார். இவ்வாறு கடக்கும் போது உங்களது பிறவி ஜாதகத்திற்கு ஏற்ப பாவம் (வீடு) அமைந்திருக்கும். இப்படி ஒவ்வொரு வீட்டில் அமைந்திருக்கும் கிரகவமைப்புக்கு ஏற்றவாறு அந்த வீட்டில் குரு இருக்கும் போது உங்களுக்கு பலன் கிடைக்கும். இது பற்றி விளக்க முற்பட்டால் அது ஜோதிட ஆராய்ச்சி ஆகி விடுமாதலால் இந்த விளக்கத்துடன் நிறுத்துகிறோம். இப்படி பன்னிரெண்டு வருடங்கள் என்பது கல்வி, யோகசாதனை என்பவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒருமாணவன் பன்னிரெண்டு வருடங்கள் ஒருவிடயத்தினை பயிற்சி செய்யும் போது அவனுக்கு அவனது பிறவி முற்கணக்கின் படியும், அவனது முயற்சியாலும், குருவானவர் தனது ஆற்றலினாலும் அவனது சாதனையினை சித்திபெறச்செய்கிறார். இதுவே பன்னிரெண்டு வருடங்கள் வித்தை கற்க வேண்டும் என்பதன் இரகசியம்.
உண்மை விளக்கம் என்னவெனில், நாம் எந்த ஒரு வித்தையையும் கற்று தெளிவுறவேண்டுமானால் நவ கோள்களில் குருவினுடைய ஒரு சுற்று பூர்த்தியாகி இருக்க வேண்டும். அதாவது மனிதனுடைய உடல், மூளை மன இயக்கங்கள் மனிதனது ஸ்தூலா சூஷ்ம உடல்களிலுள்ள சக்கரங்கள் மூலம் நவ கோள்களினதும், நட்சத்திர மண்டலத்தின் மூலமும் வெளிவிடும் சூஷ்ம சக்தியினை ஏற்று செயற்படுகிறது. இந்த ஒரு சுற்று முடிவுறும் வரை நீங்கள் குருவிடம் இருக்கும் போது உங்களுடைய வித்தை கற்கும் ஆற்றல், வித்தையினை பிரயோகிக்கும் தன்மை, எப்படியான மன எழுச்சிகள் உங்களில் உருவாகும், மற்றைய கோள்களின் தாக்கம், உள்மன பதிவுகள் என்பவற்றை குருவானவர் அனுமானித்துக் கொள்வார். அதன் பிறகு உங்களுக்கு தரக்கூடிய வித்தை எதுவென (காரணமாங் குருபதத்தைக் கருதிப்பாரு) காரணத்தை கருதிப்பார்த்து வித்தைகளை தருவார்கள். இவ்வாறு பெற்ற வித்தைகள் பிரயோகிக்கும் போது சித்திக்கும். உங்களை ஞானத்தில் இட்டுச்செல்லும்.
இது பற்றிய விளக்கத்தினை இத்துடன் முடித்துக்கொள்கிறோம். மேலதிக விளக்கங்கள் தேவைப்படுபவர் பின்னூட்டத்தில் அனுப்பவும், கேள்வி பதிலில் விளக்கப்படும்.  
குருவின் தேவை
அடுத்து, இந்த ஞானத்தில் இரண்டு குருமாரைப்பற்றி கூறுகிறார்;
1.   மெய்ஞான குரு,
2.   வித்தை தந்த குரு.
ஆதியிலே வித்தைகள் எல்லாம் சிவபெருமானிடம் இருந்து சக்தியிற்கு உபதேசிக்கப்பட்டது. அதன் பின் சித்தர்களுக்கும், ரிஷிகளுக்கும் உண்மை விளக்கம் விளக்கப்பட்டு அவர்கள் மூலம் குருபரம்பரை உருவாக்கப்பட்டு அதன் மூலம் தலைமுறை தலைமுறையாக கற்பிக்கப்பட்டு வந்தது. ஆக நாம் வித்தை கற்கும் சத்குருவின் பரம்பரையில் யார் முதல் குருவோ (எமக்கு அகஸ்திய மகரிஷி) அவரே மெய்ஞான குரு, அவர் தற்போது ஸ்தூல தேகத்தில் இல்லாததால் பூஜை பண்ணு என்றும், உனக்கு நேரடியாக வித்தை கற்பிக்கும் குருவை எப்போதும் மதித்து, அவர் கற்பித்ததை பொய்ப்பிக்காமல் பின்பற்றி அவரிடம் சேவை செய், அதன் பின்பு உனக்கு உலகமெல்லாம் போற்றும் உண்மையினை சொல்கிறேன் என்கிறார் அகத்தியர் பெருமானார். இன்று வேடிக்கை என்னவெனில் உயிருடன் ஸ்தூல உடலில் இருக்கும் குருவினது உபதேசத்தினை பின்பற்றாமல் அவருக்கு பூஜை செய்கிறார்கள், தங்களது மெய்ஞான குரு யாரேன்று அறிகிலார்களில்லை. (கௌளாச்சாரத்தினை பின்பற்றுபவர்கள் இதற்கு விலக்கு)
இதன் பயன் என்ன? இப்படி செய்வதனால் மனமும் சித்தமும் பண்பட்டு குருவினதும் சீடனதும் மனம் ஒருவித பரிவு நிலையினை (RESONANCE)  அடைகிறது, இதன் பின் குருவினதும் சீடனதும் மனம் இரண்டற கலக்க ஆரம்பிக்கிறது. அப்போது சீடன் வித்யா குரு உபதேசித்த வித்தைகளைனைத்தினதும் பொருள் விளங்கி ஞானத்தினை அடைகிறான். இது போல் ஞான குருவினை பூசிக்கும் போது அவரால் ஆகாய மனத்தில் பதியப்பட்ட உண்மை ஞானம் சீடனுள் உள்வாங்கப்படும். இதனால் அவன் வித்தையின் உண்மை வடிவத்தினை அறிந்து புரிந்து இந்த வையமெல்லாம் போற்றும் உண்மையினை விளங்கிக்கொள்கிறான்.
இப்படி இந்தப்பாடலில் வித்தை/ஞானம் யாருக்கு தெரிவிக்கலாம் என்ற பக்குவம் கூறிவிட்டார்,
சாதனை: (PRACTICAL TECHNIQUE)
எந்தவொரு வித்தையும், கல்வியும் கோட்பாடு (Theory), பயிற்சி (Practical) என இரண்டு பிரிவுகளைக் கொண்டது, ஆக இந்தப்பாடலில் கோட்பாட்டை வெளிப்படையாக கூறிவிட்டார். பயிற்சியினை சூட்சுமமாக கூறியுள்ளார். அது என்ன? இன்றைய உலகில் பல ஆயிரம் குருமார், சித்தர்கள், ரிஷிகள் தங்களை குருவாக அறிவித்துகொண்டு யோகம், பிரணாயாமம் என கற்பித்து வருகிறார்கள், நாமும் பல சாமியார்களிடம் போய்விட்டோம், யாரை குருவாக அடைவது என்று குழப்பமாக உள்ளது, தற்போதைய நிலையில் சாமிமரை நம்புவதே கடினமல்லவா? அப்படியானாய் எப்படித்தான் குருவின் அருளினைப் பெறுவது? அதற்குத்தான் இந்தப்பாடல் முதல் வரியில் சூட்சுமம் சொல்கிறார். "மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு" ஆம் ஆதிகுருவான மெய்ஞ் ஞான குருவினை பூசை பண்ணு, எப்படிப் பூசை செய்வது, மனதிலேயே பூசை செய்யலாம், யார் அகத்தியர் குருபரம்பரையில் வித்தை கற்க விரும்புகிறார்களோ அவர்கள் அகத்தியர் பெருமானாரையும், காகபுஜண்டரை குருவாக எண்ணினால் அவரையோ, அல்லது போகர், புலிப்பாணி என ஆதி சித்தர்களை எண்ணி பிரார்த்தித்தால் அவர்கள் குருபரம்பரையில் யாராவது ஒரு வித்யா குருகிடைப்பார். அவர் மூலம் நீங்கள் வித்தைகளின் சூட்சுமத்தினை புரிந்து கொண்டு பன்னிரெண்டு வருடங்கள் தொடர்ந்து சாதனை புரிந்து வருவீர்களானால் சித்தி பெறுவீர்கள் என்பது நிச்சயம். 
சரி எப்படி பிரார்த்திப்பது, முதலில் ஆதி ஞான குருவின் படத்தினை பிரிண்ட் செய்து உங்களது பூஜை அறையில் வைத்துக்கொள்ளவும். அல்லது விளக்கேற்றி அதில் ஒளிவடிவாக குரு இருப்பதாக பாவித்துக்கொள்ளவும். பின்பு அவரது பெயரிற்கு முன்னால் "ஓம்" சேர்த்து பின் அவரது பெயருடன் இறுதியில் "நமஹ" அல்லது "போற்றி" *ஓம் அகத்திய மஹரிஷியே நமஹ, ஓம் காகபுஜண்ட மகரிஷியே போற்றி) எனக் கூறவும். இப்படி தினமும் குறித்த அளவு (12, 27, 57, 108, 1008) உங்களால் இயன்ற அளவு கூறி, இறுதியாக மனதில் உண்மையான ஆர்வத்துடன், அன்புடன் "ஞான குருவே உங்களை சரணடைந்து வித்தைகள் கற்று பிறவிப்பயனை பெறவிரும்புகிறேன், வழிகாட்டுங்கள்" என பிரார்த்திக்கவும்.  உங்களது சித்தத்திலுள்ள பதிவுகளுக்கேற்ப உடனடியாகவே அல்லது பல மாதங்கள் வருடங்களுக்கு பிறகோ உங்களுக்கு வித்யா குரு கிடைப்பார். அவ்வாறு கிடைக்கவிட்டாலும் நீங்கள் தியானிப்பதன் பலானாக உங்களது உலகியல் தேவைகள் நீங்கள் அறியாத வகையில் நிறைவேறி வரும்.
பயிற்சி செய்து பலனை அனுபவியுங்கள். எமக்கும் தெரிவியுங்கள்
சரி இப்படியுள்ள சீடனுக்கு குரு எந்தெந்த வித்தையெல்லாம் தருவார்? விடை அடுத்த பாடலில் கூறுகிறார்.

No comments:

Post a Comment