Tuesday, 21 February 2012

கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை - 01

கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை - 01


பகுதி -01

ஓம் ஸ்ரீ கோரக்க நாத ஸ்ரீ குரு பாதம் பூஜயாமி தர்ப்பயாமி நமஹ!

கோரக்க நாதர் விபூதியிலிருந்து பிறந்தவர் என்பது அவரது வரலாறு, அதாவது சாதாரண காமத்துடன் கூடிய ஆண் பெண் சேர்க்கையில்லாமல் ஞானத்தில் (தாந்திரீக முறையில் காமத்தை வென்று ஞானம் பெறும் முறைகள் உண்டு) பிறந்தவர் என்பதே உண்மை விளக்கமாகும். விபூதியிற்கு ஞானம் என்றும் அர்த்தம் உண்டு.

தமிழ் சித்தர்கள் வரிசையில் கோரக்கர் எனவும், வட நாட்டு நாத சம்பிரதாயத்தில் கோரக்க நாதர் என நாத சம்பிரதாய தலைவராகவும் கருதப்படுகிறார். இவர் பௌத்த தாந்திரீகத்திலும் முக்கியமான குரு ஆவார். மந்திர சாஸ்திரம், ஹட யோகம், தாந்திரீகம், இரசவாதம், காயகல்பம் என்பவற்றில் பெரும் சித்தர்.

அவர் வட மொழியில் அருளிய நூல் "கோரக்க போதம்" என்பதாகும். இது கோரக்க நாதரிற்கும் அவரது குருவான மச்சேந்திர நாதரிற்குமிடையிலான சம்பாஷணை வடிவில் உள்ள ஒரு அரிய குண்டலினி யோக, தாந்திரீக ஞான நூலாகும்.  இந்த பதிவில் இதன் மொழி பெயர்ப்பை மாத்திரம் பதிவிடுகிறோம். இன்று கோரக்க நாதரது ஜயந்தி தினமாகும், இவர் எமது குருபரம்பரையின் ஆதிகுருக்களில் ஒருவர் என்பதனால் அவரது ஆசிகள் அனைவருக்கு கிடைக்க வேண்டி பிரார்த்தித்து பதிவிடுகிறோம்.

முக்கிய குறிப்பு: இந்த பதிவு வெறும் மொழிபெயர்ப்பு மாத்திரம்தான், இதன் பொருள் மறைபொருளாக விளக்கப்பட்டுள்ளது, படிப்பவர்கள் குருவருள் கொண்டு விளங்க முயற்சித்தால் பொருளறியலாம். இவற்றில் உள்ள விடயங்களை குண்டலினி யோகம், ஸ்ரீ சக்ர பூஜை விதிகளுடன் பொருந்திப்பார்த்து பயன்பெறலாம். ஆதலால் இது அனைவருக்குமான பதிவு அல்ல என்பதனையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு மாத்திரமே உரியது.

இனி 

கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை
  1. கோரக்கர்: குரு நாதா! எனக்கு சற்குருவானவரே, சீடரான நான் எனது சந்தேகம் தெளிய கேள்வி கேட்கலாமா? அதற்கு நீங்கள் தயை கூர்ந்து பதிலளிப்பீர்களா? இந்த சம்பாஷணையினை ஆரம்பிப்பதற்காக கேட்கிறேன்! ஒரு உண்மையான ஆன்ம சாதனையினை விரும்பும் மாணவனின் இலக்கணம் என்ன?
  2. மச்சேந்திர நாதர்: பற்றுக்கள் அனைத்தையும் துறந்து அவதூத நிலையினை அடைய எண்ணும் மாணவன் வீதியோரங்களிலோ, காட்டிலோ, மரத்தடியிலோ, வாழுவது பற்றி எந்தவித விருப்பு வெறுப்பையும் கொள்ளலாகாது.  அவன் முதலாவதாக தன் மனதில் பற்று, வன்மம், பேராசை, மூட நம்பிக்கை, காம, குரோத, மத, மாச்சரியங்களை ஆகிய அறியாமைகளான மாயையினை நீக்க பயிற்சிக்க வேண்டும்.   அவன் அனந்தமான பரம்பொருளை எப்போதும் பாவிக்கவேண்டும். சிறிதளவு பசிக்காக உண்ணவேண்டும். சிறிதளவு தூக்கம் வேண்டும், இதுவே ஆன்ம வித்தை அறியவேண்டிய மாணவன் முதலாவதாக செய்ய வேண்டியது.
  3. கோரக்கர்: அவன் எதனை பார்க்க வேண்டும்? எதனை பாவிக்க வேண்டும்? எதனை சாரமாக அறிந்து கொள்ள வேண்டும்? எப்போது அவன் தலையை மழித்துகொள்ள வேண்டும்? பிறவிப் பெருங்க்கடலினை எதனைக் கொண்டு கடக்க வேண்டும்?
  4. மச்சேந்திர நாதர்: அவன் தன்னை அறிய வேண்டும், எல்லையற்ற பரம்பொருளை பாவிக்க வேண்டும், அந்த பரம்பொருளே உண்மையின் சாரம் என்பதனை அறிய வேண்டும், சத்குருவிடமிருந்து தீட்சை உபதேசம் பெற்றபின்பு ஆணவத்தினை துறந்து விட்டதற்கு அடையாளமாக தலை முடியினை மழித்துக்கொள்ளவேண்டும்.  பிரம்ம ஞானத்தின் உதவி கொண்டு பிறவிப்பெருங்க்கடலினைக் கடக்க வேண்டும்.
  5. கோரக்கர்: குருதேவா எமது குருபரம்பரையின் உபதேசம் என்ன? சூன்யம் எனும் நிலை எங்குள்ளது? சப்தம் எனும் ஒலியின் குரு யார்?
  6. மச்சேந்திர நாதர்: எல்லையற்றது எதுவோ அதுவே குருவின் உபதேசமாகும், சூன்யம் எமக்குள்ளேயுள்ள நிலையாகும், உணர்ந்தறிந்து வெளிப்படும் சொற்கள் வார்த்தைகளின் குருவாகும் (அதாவது அனுபவித்து மற்றவருக்கு சொல்லும் வார்த்தையே குரு உபதேசமாகும்.)
  7. கோரக்கர்: மனதின் உருவம் என்ன? பிராணசக்தியின் இருப்பு என்ன? தச பிராணங்களின் திசைகள் தான் என்ன? எந்த கதவு இந்த தசபிராணங்களையும் கட்டுப்படுத்தும்?
  8. மச்சேந்திர நாதர்: சூன்யம்தான் மனதின் இருப்பு, பிராணசக்தியின் இருப்பு கண்ணுக்கு தெரியாதது, தச பிராணங்களது திசை கூறமுடியாதது, பத்தாவது துவாரம் இவையனைத்தையும் கட்டுப்படுத்துகிறது.
  9. கோரக்கர்: இருப்புக்கு எது மூலம்? எது கிளை? யார் குரு? யார் சீடன்? எந்த நிலையில் ஒருவன் தன்னிலையான சுயத்துடன் செல்ல முடியும்?
  10. மச்சேந்திர நாதர்: மனமே அனைத்திற்கும் மூலம், பிராணனே அனைத்து செயல்களின் கிளையாகும், சப்தமாகிய (மந்திர) ஒலியே குருவாகும், சிரத்தையுடையவன் சீடனாகும். ஆன்ம விடுதலை அடைந்தவன் தன்னிலையான சுயத்துடன் தனியாக செல்ல முடியும்.

3 comments:

  1. குரு சாட்சாத் பரப்பிரம்மா
    புண்ணியம் செய்யுங்கள்! தான தர்மம் செய்யுங்கள் ! எது புண்ணியம்!
    குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ?! குருவை வணங்க கூசி
    நின்றேனோ!? மறுமுறை கண்ட வாசகத்தில் வள்ளல் பெருமான் உரைத்த
    நீதி இது! குருவை பெறவேண்டும்! அதுவே புண்ணியம்! நல்ல சற்குருவை
    பெற்று திருவடி உபதேசம் திருவடி தீட்சை பெற வேண்டும்! அவனே புண்ணியம் செய்தவன்!
    http://sagakalvi.blogspot.in/2012/02/blog-post_20.html

    ReplyDelete
  2. https://www.youtube.com/watch?v=IQg9D9Sr-7g&t=109s&ab_channel=SARVASIDDHAR%27SSRIVAALAIJEEVAPEEDAM

    ReplyDelete
  3. https://www.youtube.com/watch?v=1C08vfiOSFo&t=30s&ab_channel=SARVASIDDHAR%27SSRIVAALAIJEEVAPEEDAM

    ReplyDelete