ஞானம் - 02 :
குரு சொல்லித்தரும் சித்தவித்தைகள் எவை?
ஓம் அகஸ்திய மாமகரிஷி குருவே நமஹ
கார்த்தாக்காலோரெழுத்து வழியுஞ்சொல்வார் கருச்சொல்வார் குருச்சொல்வார் களங்கமற்று
பார்த்தாக்கற்சித்திமுக்தி யிரண்டும் சொல்வார் பரி வாசி வாலை மூன்றெழுத்துஞ்சொல்வர்
சேர்த்தாகாலெட்டோடே யிரண்டுஞ்சொல்வார் திவஞ்சொல்வார் நானுமிடமுஞ்சொல்வார்
பூத்தாக்காலாயிரத்தெட்டிதழின் வாசி பூங்கமலத் திருவடியைப் பூசைசெய்யே
பொருளுரை:
- கார்த்தாக்காலோரெழுத்து வழியுஞ்சொல்வார்: காத்திருந்தால் கால் - வாயு என்னும் பிராணனை வசப்படுத்தும் ஒரெழுத்து வழிமுறையும் சொல்வார்
- கருச்சொல்வார் குருச்சொல்வார்: உண்மையும் சொல்வார், குருவாகிய மெய்ஞானமும் சொல்வார்
- களங்கமற்று பார்த்தாக்கற்சித்திமுக்தி யிரண்டும் சொல்வார்: மனதில் களங்கமில்லாது பார்த்தால் முக்தியுடன் சித்திகளும் பெற வழி சொல்வார்
- பரி வாசி வாலை மூன்றெழுத்துஞ்சொல்வர்: பிராணன், மூச்சு, வாலை சக்தியின் மூன்றெழுத்து மந்திரம் ஆகியன சொல்லித்தருவார்
- சேர்த்தாகாலெட்டோடே யிரண்டுஞ்சொல்வார்: பத்து பிராணன் பற்றியும் சொல்வார்
- திவஞ்சொல்வார்: தேவலோகம் என்னவென்பது பற்றியும் சொல்வார்
- நானுமிடமுஞ்சொல்வார்: அதனை (தேவலோகம்) அடையும் வழியும் சொல்வார்
- பூத்தாக்காலாயிரத்தெட்டிதழின் வாசி: வாசி யோகத்தால் பிராண சக்தி வசத்தால் மலரும் ஆயிரத்தெட்டிதழில்
- பூங்கமலத் திருவடியைப் பூசைசெய்யே: தாமரைமலர் போன்ற திருவடியினை பூசை செய்யே
நேர்பொருள்:
முதலாவது பாடலில் கூறிய தகுதியுடைய ஆவலுடைய சீடனுக்கு, பத்து பிராணனையும்
மூச்சாகிய வாசியினை ஓரெழுத்தாகிய மந்திரம் மூலம் வசப்படுத்தும் உண்மை
முறையினையும் ஞானத்தினையும் சொல்லித்தருவார். மனதில் களங்கமற்று குருவினை
பார்த்தால் உலகவாழ்கைக்கு தேவையான சித்திகளையும் ஆன்மீக வாழ்கைக்கு தேவையான
முக்தியினையும் பெறவழியான வாலை மந்திரம், அதனை மூச்சுடன் கலந்து பிராணனை
வசப்படுத்தும் முறை, அதன் மூலம் பத்துப்பிராணன்களையும் வசப்படுத்தி தேவலோக
இன்பத்தினை பெறும் வழிமுறையினையும் சொல்வார். இந்த முறையினை பின்பற்றி
பிராணசக்தியினை வசப்படுத்தி தலைக்கு மேல் மலரும் சகஸ்ராரம் எனும்
ஆயிரத்தெட்டிதழ் தாமரையில் குருவின் திருவடியினை பூசைசெய்வாயாக.
சித்த வித்யா விளக்கவுரை:
இந்தப்பாட்டில் வித்தையின் படிமுறைகள் பற்றி குருநாதர் கூறுகிறார், அவற்றை வரிசைப்படி பார்ப்போம்;
1. பிராணன் எனும் ஜீவ சக்தி மூச்சிழுக்கும் போது உச்சந்தலையில் உள்ள
பிரம்மாந்திரம் எனும் கபாலக்குழியினூடாக (சிறு பிள்ளைகளில் இது மூடாமல்
துடித்துக்கொண்டிருக்கும்) ஆக்ஞா சக்கரம் தொடக்கம் மூலாதாரம் வரையிலான
ஆறாதரங்களில் நிரம்பி பின் பத்துவித பிராணன்களாக பிரிந்து மற்றைய சிறு
சக்கரங்களூடாக பரவி உடலிற்கு சக்தியினை கொடுத்து செயற்படுத்துகிறது. இது
சாதாரணமாக எப்போதும் எல்லா மனிதரிலும் நடைபெறும் நிகழ்வாகும். இந்த பிராண
சக்தி ஆதாரங்களில் இருக்கும் அளவிற்கேற்ப மனிதனது செயல்கள்
கட்டுப்படுத்தப்படுகிறது. (இது பற்றி வேறொரு பதிவில் பார்ப்போம்) இதனை
செம்மைப்படுத்துவதற்கு ஒரெழுத்தாலான மந்திரம் முதலாவதாக குரு சீடனுக்கு
சொல்லித்தருவார். இந்த பயிற்சி மூலம் சீடனுக்கு மனக்கட்டுப்பாடு,
பிராணசக்தி, களங்கமற்ற மனம் என்பன கிடைக்கும். (ஓரெழுத்து மந்திரம் எதுவென
வெளியிடுவதற்கு உத்தரவில்லை, பக்குவமுள்ளோர்க்கு குருமுகமாய் கிட்டும்)
2. இதில் சித்தியான பின் பரியான பிராணனனை (மாணிக்கவாசகர் நரியை
பரியாக்கினர் எனும் சூட்சுமம் இதுதான்) மூச்சினால் கலந்து, பிரபஞ்ச
சக்தியான வாலை சக்தியின் மூன்றெழுத்து மந்திரத்தினால் சித்தியாக்க உலக
வாழ்க்கைக்கு தேவையான சித்தியும், ஆன்மீகவாழ்க்கைக்கு தேவையான முக்தியும்
கிட்டும். இப்படி வாலை மூன்றெழுத்து மூலம் தசபிராணனையும் சீர்படுத்த வாழ்வு
தேவலோக வாழ்வைப்போல் இன்பமாகும். இதனை கடைப்பிடித்து சித்தியாக்க தலைக்கு
மேல் ஆயிரத்தெட்டிதழ் கொண்ட சகஸ்ராரம் மலர்ந்து வர அந்த ஆதாரத்தில்
குருவின் திருவடியினை தியானிக்க வேண்டும். இதனால் குருவிற்கும்
சீடனிற்குமான சூட்சும தொடர்பு (Astral link) வலுக்கும்.
இந்த ஞானத்தில் குருவை அடைந்த மாணவன் என்னவித்தைகளை பெறுவான், அதன் படி நடக்க என்னென்ன கிடைக்கும் என்பதனை தெரிவிக்கிறார்.
சாதனை: (PRACTICAL TECHNIQUE)
இதிலுள்ள சாதனைகள் குருமுகமாய் பயிலவேண்டுமாதலால் வெளிப்படுத்த
உத்தரவில்லை. அகஸ்திய மகரிஷியை முதல் பாடலில் கூறியபடி பூசித்து வாருங்கள்.
கட்டாயம் கிட்டும். அத்துடன் தொடர்ந்து வரும் பதிவுகளில் இதன் விளக்கங்கள்
வரும்.
அடுத்த பாடலில் சித்த வித்தையின் பாடத்திட்டம் பற்றி கூறுகிறார்,
மாணவர்களுக்கு விரிவுரைக்கு முன்னதாக பாடத்திட்டம் என்னவென்று கூறினால்
கவனமாக இருப்பார்களில்லையா? அதனால் எதையெல்லாம் குருவிடம் கேட்டு
கற்றுக்கொள்ளவேண்டும் என கூறுகிறார்.
https://www.youtube.com/watch?v=1C08vfiOSFo&t=30s&ab_channel=SARVASIDDHAR%27SSRIVAALAIJEEVAPEEDAM
ReplyDelete