Tuesday, 21 February 2012

அகத்திய மாமுனிவர் ஞானம் – முப்பது


சித்த வித்யா விளக்கவுரை

ஓம் அகஸ்திய மாமகரிஷி குருவே நமஹ

அகத்தியர் ஞானம் - முப்பது என்ற இந்த முப்பது பாடல்களும், இன்னும் பல அகத்தியர் அருளிய நூற்களும் பழம் பிரதிகளாக சித்த வைத்தியரான எனது பேரனாரிடம் இருந்து கிடைக்கப்பெற்றது. இதனை கற்று புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அண்மையில் ஏற்பட அனுதினமும் என் அகத்தில் வீற்றிருந்து வழி நடாத்தும் அகஸ்திய மகரிஷி அருளாசியோடு இதன் பொருளை விளங்க முற்படுகிறேன். சிறுவயதிலிருந்து அகஸ்திய மகரிஷியை குலதெய்வமாக வழிபடும் பேறுபெற்றதனால், அவரருளால் அவரது பரம்பரையில் யோகவித்தை கற்ற சித்த புருஷர் மூலம் சித்த வித்தைகளுக்கான தீட்சை பெற்று அதன் வழி சாதனை புரிகின்றதன் பயனாக விளங்கிய சில விடயங்களை சித்த வித்தை கற்க ஆர்வம் உள்ளவர்களுக்காக "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற நோக்கில் வெளியிடுகிறோம். இதில் பொருட் பிழையிருப்பின் எனது புரிதலில் உள்ள பிழை, சரியிருப்பின் அது எல்லாம் வல்ல அகஸ்திய மகரிஷியின் வாக்கு எனக்கொள்க.
இந்த நூலைலில் உள்ள உரை நடை எமது குருபரம்பரையில் அகஸ்திய மகரிஷியிடமே நேர்முகமாய் பன்னிரெண்டு வருடங்கள் பொதிகை மலை, நீலகிரி மலையில் சூஷ்ம ஆசிரமத்தில் நேர்முகமாய் கற்று தன் குரு நாதரின் ஆணைக்கிணங்க  தான் கற்பித்த வித்தைகளுக்களை நிரூபணமாய் பூவுலகில் 108 வருடங்கள் வாழ்ந்த உன்னத யோகி டாக்டர். பண்டிட். ஜீ. கண்ணைய யோகியாரது அணுகுமுறையில் எழுதப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் இதில் கூறப்பட்ட முறையினை செய்து பலன் பெறும் பயிற்சி முறைகளும் விளங்கப்படுத்தப்பட்டிருக்கும்.
சித்த வித்யா விளக்கவுரை
அதுவென்ன சித்த வித்யா விளக்கவுரை? சாதரணமாக பாடல்கள் எதுகையும் மோனையும் கூடி யாப்பிலக்கணத்திற்கமைய எழுதப்பட்டிருக்கும், அதற்கு நல்ல தமிழறிஞர் விளக்கவுரை கூறுவார். இது எப்படியெனில் பல்கலைக்கழகத்தில் இரசாயனயவியல் பாடத்தினை விரிவுரையாளர் குறிப்பு (NOTES) வாசிப்பது போன்றது. இதனை நன்கு மனப்பாடமாக்கி சித்தி பெற்றுக்கொண்டாலும், கல்வியினை முடித்து இரசாயனவியலாளராக (Chemist) தொழில் செய்ய முடியாதலால், ஆய்வு கூடத்திற்கு சென்று அமிலங்களையும், இரசாயனங்களையும் கலந்து பெறும் அனுபவ அறிவே வாழ்க்கையில் தொழிலில் முன்னேற்ற செய்யும் என்பது போல், சித்தர் பாடல்களை படித்தும் எதுகை மோனை கூடி வாய்ப்பேச்சுக்கும் பயன் படுத்தாமல், அனுபவ பயிற்சிக்கு பயன்படுத்தும் அணுகு முறையே சித்த வித்யா விளக்கவுரை. இது ஒருவகை குறிவிலக்கம் (DECODING). சித்தர் பரம்பரையில் தொடர்புகொண்டதினால் வந்த அனுபவத்தில் குரு ஆணைக்கிணங்க இதில் தகுந்தவர்கள் பலன் பெறுவதற்காக வெளியிடுகிறோம்.


நண்பர்களே, வாருங்கள், சித்தர் பாடல்களை பொருளுணர்ந்து அருள் பெறுவோம்!


எம்பெருமான் அகத்திய மாமகரிஷியின் அருளாசியோடு இன்றைய தினத்திலிருந்து சித்தர் பாடல்களிலுள்ள ஆத்ம, ஞான, யோக வித்தைகளிற்கு சித்த வித்ய விளக்கவுரை பதியப்படும்.

முதலாவதாக அகத்திய மாமுனிவர் அருளிய ஞானம் முப்பது வெளியிடப்படுகிறது. சித்தரியலில் ஆர்வமுள்ள அனைவரையும் இந்த பதிவுகளை கற்று பயன்பெறுமாறு அழைக்கிறோம்.

இந்த வலைப்பின்னலில் வாராந்தம் (குருவருள் பெற உகந்த வியாழக்கிழமைகளில்) ஒரு பாடலிற்கு சித்த வித்யா விளக்கவுரை பதிப்பிக்கப்படும். வாசகர்கள் அது தொடர்பான கேள்விகளை பின்னூட்டமிடலாம், அவை சேகரிக்கப்பட்டு கேள்வி - பதிலாக பதியப்படும்.

1 comment:

  1. ஓம் அகஸ்திய மாமகரிஷி குருவே நமஹ

    ReplyDelete