Tuesday, 21 February 2012

நாடிகளூடான பிராண சுற்றோட்டம் (இந்திய யோகசாத்திர அடிப்படையில்)



நாடிகளூடான பிராண சுற்றோட்டம் (இந்திய யோகசாத்திர அடிப்படையில்)



=========================================================================================

நேற்றைய பதிவில் சீன பிராண சாத்திரத்தின்படி பிராணனது ஓட்டம் எப்படி என்பதனைப் பார்த்தோம். இன்று இந்திய யோக சாத்திரத்தின் பிராண சுற்றோட்ட அடிப்படைகளான நாடிகள் பற்றிய  விளக்கத்தினைப் பார்ப்போம். 
பிராணன் ஸ்துல சூட்சும உடலில் செல்லும் கண்ணுக்கு தெரியாத இழைகள் நாடிகள் எனப்படும். இவை உடலில் காணப்படும் இரத்தம் செல்லும் குழாய்களோ, நரம்புகளோ இல்லை, சூஷ்ம உடலில் காணப்படும் பிராண ஓட்டப்பாதைகளாகும். சரீரத்தில் பல்லாயிரக்கணக்கான நாடிகள் அடங்கியுள்ளன, சித்தர்களின் கணக்குப்படி அவை 72000 ஆகும். இவை வாய்க்கால்கள் என்றால் பிராணனின் சேமிப்பிடம் சக்கரங்கள், இவை பிரதானமாக  ஆறாக (௦6) குறிப்பிடப்பட்டபோதும் இன்னும் பல உபசக்கரங்கள் உண்டு. யோக சாதனைக்கு பயன்படுபவை இந்த ஆறதரங்களே! இந்த நாடிகளின் பிராண ஓட்டத்திற்கும் மனம், உடல் ஆகியவற்றின் நிலைகளுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. 
எல்லா நாடிகளும் உற்பத்தியாகும் இடம் காண்டம் எனப்படும். இது ஆசன வாய்க்கும் பிறப்பு உறுப்பின் அடிப்பாகத்திற்கும் இடையே மூலாதார சக்கரத்திற்கு மேலே அமைந்துள்ளது. யோக நுல்களில்  இதன் வடிவம் முட்டை வடிவானதாக குறிப்பிடப்படுகிறது. இதிலிருந்து பல நாடிகள் உண்டானாலும் முக்கியமானவை 14 நாடிகள் முக்கியமானவை. அவை
  1. சுழுமுனை
  2. இடை
  3. பிங்கலை
  4. காந்தாரி
  5. ஹஸ்தஜிஹ்வை
  6. குஹு
  7. சரஸ்வதி
  8. பூசை
  9. சங்கினி
  10. பயஸ்வினி
  11. வாருணி
  12. அலம்பூசை
  13. விச்வோதரை
  14. யசஸ்வினி ஆகியனவாகும்.
இவற்றில் யோகப்பயிற்சிக்கு சுழுமுனையே ஆதாரமாகும். மேலே கூறப்பட்ட காண்டத்திலிருந்து உருவாகும் சுழுமுனை மூலாதார சக்கரத்தின் நடுமையத்துடன் இணைக்கப்படுகிறது. இது தற்கால உடற்கூற்றியலுடன்(Anatomy) ஒப்பிடுவதானால் மூள்ளந்தண்டு முடிவுறும் பகுதியில் குதிரை வால் எனப்படும் நரம்புபின்னல்கள் காணப்படும இடத்துடன் ஒப்பிடலாம். படம் பார்க்கவும். 


 
சூட்சும சரீரத்தின் கேந்திர ஸ்தானம் இந்த காண்டம் எனும் பகுதியாகும். இதிலிருந்து முள்ளந்தண்டுக்கு இணையாக மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி என்ற ஐந்து ஆதாரங்களும் ஆக்ஞா, துவாதசாந்தம் என்பன மூளையை சார்ந்தும் உள்ளன. இவற்றின் செயற்பாடு பிராணசக்தியினை சேமிபதாகும். இந்த சேமிப்பிலிருந்து நாடிகள் வழியாக உடலின் மேற்பரப்புவரை பிராண சக்தி கடத்தப்படுகிறது. இவ்வாறு கடத்தப்படும் பிராண சக்திகள் தங்கும் புள்ளிகள்தான் (Staying nodes) வர்மம் எனப்படும். 
இந்த புள்ளிகள் 108, அவற்றை கீழ்வருமாறு குருதேவர் அகத்தியர் கூறியபடி சக்கரங்களுடன் தொடர்புபடுத்தி பிரிக்கலாம்.
  1. தலை முதல் கழுத்துவரையுள்ள வர்மம் 25 இவை ஆக்ஞா, துவாதசாந்த சக்கரங்களை அடிப்படையாக கொண்டவை.
  2. இருகரங்களிலிமுள்ள வர்மங்க்கள் 14, இவை விசுத்தி சக்கரத்தினை அடிப்படையாக கொண்டவை. 
  3. கழுத்து முதல் நாபிவரையுள்ள வர்ம புள்ளிகள் 45 இவை விசுத்தி, அனாகத சக்கரங்களை அடிப்படையாக கொண்டவை.
  4. நாபியிலிருந்து குதம் வரையிலான வர்ம புள்ளிகள் 9, இவை மணிப்பூரகம், சுவாதிஷ்டானத்தினை அடைப்படையாக கொண்டவை.
  5. கால்களில் உள்ள வர்மங்கள் 15, இவை மூலாதாரத்தை அடிப்படையாக கொண்டவை. 
இந்த புள்ளிகள் மூலம் உடலிலுள்ள பிராணசக்தியின் அளவினை கூட்டலாம், குறைக்கலாம், தடுக்கலாம். சித்தர்கள் இந்த பிராண சுழற்சியின் பயன்பாட்டினை மூன்று கலைகளாக பிரித்து தந்திருக்கிறார்கள். 
  1. யோகம்
  2. மருத்துவம்
  3. போர்க்கலை
யோக கலையினை பின்பற்றவேண்டியவர்கள் கவனிக்க வேண்டியது  சுழுமுனை, இடகலை, பிங்கலை முதலான மூல நாடிகளுடான பிராண சுற்றோட்டத்தினை கட்டுப்படுத்துவதாகவும், மருத்துவம், போர்க்கலை அதனை வர்மசாத்திரமாகவும் பயன்படுத்துகிறது. உண்மையில் இந்த இடைத்தொடர்புகளை நன்கு கற்றறிவது இக்கலைகளில் தேர்ச்சி பெற உதவும். யோக சாதனை முக்கியமான பகுதி நாடிகளில் செயற்பாட்டை முழுமையாக அறிவதும் ஆகும்.

1 comment:

  1. அன்பரே,

    தாங்கள் இந்த வலைப்பதிவில் பதிந்துள்ள கட்டுரைகள் ஆங்கிலம் மற்றும் நோக்கு வர்மம்.... சில அடிப்படைகள்!தவிர்ந்த அனைத்தும் எம்மால் எழுதப்பட்டு, காப்புரிமையுடன் எமது சித்த வித்யா விஞ்ஞானம் வலைப்பதிவில் பதியப்பட்டவை.

    நீங்கள் உங்கள் பெயரில் பதிவது தவறானவை, இப்படி பதிவதானால் எமது இணைப்பையும் தந்து பதிந்திருக்கலாம்,

    உங்கள் தன்னிலை விளக்கத்தினை தெரிவியுங்கள்.

    இப்படிக்கு
    அன்புடன்
    சுமனன்

    ReplyDelete